Parliamentary Elections: Voting in 7 Phases – Election Commission Notification

நாடாளுமன்ற தேர்தல்: 7 கட்டங்களாக வாக்குப் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Parliamentary Elections

ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் மக்களவைத் தேர்தல் (Parliamentary Elections) மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படும் நிலையில் தேர்தல் தேதி ஏப்ரல் 19 என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

Parliamentary Elections

முதல் கட்ட வாக்குப் பதிவில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 அன்றும், மூன்றாம் கட்டம் மே 7 அன்றும், நான்காம் கட்டம் மே 13, ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20 அன்றும், ஆறாம் கட்டம் மே 25 அன்றும், இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1 அன்றும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய அரசியல் களத்தில் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் விரைவில் தொடங்கிவிடும்.

2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதிகாரிகள், ஊழியர்கள், காவலர்கள் என 1.5 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறினார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

தேர்தல் அட்டவணை (Election schedule)

  • தேர்தல் அட்டவணைப்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
  • ஜூன் 4-ம் தேதியன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
  • கர்நாடகா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு இரண்டாம் கட்டத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐந்தாம் கட்டத்திலும், நாட்டின் அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு ஏழாம் கட்டத்திலும் வாக்குப் பதிவுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

97 கோடி வாக்காளர்கள்

  • தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்.
  • பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடி.
  • 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
  • 21 முதல் 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 19.7 கோடி பேர்.
  • 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
  • 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 40 சதவீத குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

தேசியக் கட்சிகள்

  • உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 80 தொகுதிகளும், மகாராஷ்டிராவில் 48, மேற்கு வங்கத்தில் 42, பிகாரில் 40 மற்றும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளன.
  • மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கில் பி.ஏ.சங்மாவால் தொடங்கப்பட்டது, வடகிழக்கில் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற முதல் கட்சி) ஆம் ஆத்மி என ஆறு தேசியக் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *