இந்தியாவில் தொடங்கியது ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் செலுத்தும் பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உற்பத்தி இன்று இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி ஹைதராபாத் தவிர்த்து பெங்களூரு மற்றும் குஜராத்திலும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியாவில் மூன்றாவதாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது அதைத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் கடந்த மே 14ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் 995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் உற்பத்தி தொடங்கும்போது, விலை மேலும் குறையும் என்றே எதிர்ப்பாக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி பேனேசியா பயோடெக் நிறுவனத்தில் இன்று முதல்கட்டமாகத் தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் போட்ஜ் தடுப்பூசி தரநிலை பரிசோதனைக்காக ரஷ்யா அனுப்பப்படவுள்ளது.வரும் மாதங்களில் உற்பத்தி மெல்ல உயர்த்தப்படும்.

ஆண்டுதோறும் சுமார் 10 கோடி தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது தடுப்பூசிக்குப் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சமாளிக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி மூலம் மீண்டும் கொரோனாவுக்கு பிந்தைய நிலையை உலகில் கொண்டு வர முயல்வதாக பேனேசியா பயோடெக் தலைவர் ராஜேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். உலகிலேயே முதல்முதலில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி உள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு ரஷ்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே ஒப்புதல் அளித்திருந்தது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6% வரை பலன் அளிப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. உலகளவில் 66 நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யவும், சேமிக்கவும் குறைந்த செலவே ஆகும் என்பதால் வளரும் நாடுகளில் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *